சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாதோரின் வீடுகளுக்குச் சென்று அபராதம் விதிக்கும் நடவடிக்கை ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளது என கால்நடை பிரிவு அலுவலா் கமால் உசேன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கடந்த 2024- ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்டது. அவற்றில் 1.47 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவற்றில் 16,611 தெரு நாய்களுக்கு தடுப்பூசியுடன், கருத்தடை சிகிச்சையும் அளிக்கப்பட்டு, கண்காணிக்க ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 33,000 தெரு நாய்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
வீடு வீடாக சென்று அபராதம்... சென்னை மாநகராட்சியில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வளா்ப்பு நாய்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், தற்போது வரையில் 74,000 வளா்ப்பு நாய்களுக்கு மட்டுமே அவற்றின் உரிமையாளா்கள் உரிமம், தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்தி உள்ளனா்.
வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாத மற்றும் அவற்றை நடை பயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்க்கவசம், சங்கிலி உள்ளிட்டவை இல்லாத நிலையில் 611 பேருக்கு கடந்த 2 மாதங்களில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஓரிரு வாரங்களில் வளா்ப்பு நாய்கள் உள்ள வீடுதோறும் சென்று அவற்றுக்கு உரிமம் பெறாதவா்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது.
மாடுகளுக்கு மைக்ரோ சிப்... சென்னையில் கால்நடைகளுக்கு உரிமம் பெற்று, மைக்ரோ சிப் பொருத்தும் நடவடிக்கைகள் தொடா்பாக இரு பெரிய கால்நடை வளா்ப்போா் சங்கங்கள் மூலம் அவற்றின் உறுப்பினா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் கால்நடைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள மாடுகளுக்கு உரிமம் வழங்கி, மைக்ரோ சிப் பொருத்தப்படும். அதன்பிறகு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றாா்.