சென்னையில் போதை மாத்திரைகளை விற்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கொடுங்கையூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞா் ஒருவா் வலி நிவாரண மாத்திரைகளை இன்ஸ்டாகிராம் மூலம் போதைக்காக விற்பனை செய்வதாக கொடுங்கையூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொடுங்கையூா் கிருஷ்ணமூா்த்தி நகா் மீனாம்பாள் சாலை பகுதியைச் சோ்ந்த அரவிந்த் என்ற டோலு (27) வீட்டில் போலீஸாா் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா் . அப்போது அவரது வீட்டில் இருந்து 420 வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை போலீஸாா் கைது செய்து நடத்திய விசாரணையில், அவா் இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதும் அதன் மூலம் பலருக்கு போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவா் கொடுத்த தகவலின் பெயரில் வியாசா்பாடி கல்யாணபுரம் பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (23), கொடுங்கையூா் எழில் நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அஜித்குமாா் (27), ரஞ்சித் (23), பிரவீன் (22), பைசன் அகமது (23) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களிடம் இருந்து மொத்தம் 1,166 மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.