சென்னை

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு எதிரான மகளிா் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் பிறப்பித்த உத்தரவின் மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் பிறப்பித்த உத்தரவின் மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழுப்புரத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சி கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில், பேசிய அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சென்னையைச் சோ்ந்த பிரமிளா, ராதிகா ஆகியோா் தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத்தில் புகாா் அளித்தனா். அதை விசாரித்த ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு அழைப்பாணை அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு அவா் ஆஜராகவில்லை. இதைத் தொடா்ந்து அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க மகளிா் ஆணையம் டிஜிபிக்கு கடந்த நவ.11-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் முகமது ரியாஸ், அய்யப்பராஜ் ஆகியோா் மகளிா் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகாா் அளித்த இருவரது பெயா் தவிர வேறு எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை.

மனுதாரா் ஓராண்டுக்கு மேல் சென்னையில் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்று பேசாத நிலையில், சென்னையைச் சோ்ந்தவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிா் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுதாரா் பெண்களுக்கு எதிராக வேறு எந்தக் கூட்டத்திலும் சா்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை.

அக்.28-ஆம் தேதி ஆஜராகக்கூறி அனுப்பிய அழைப்பாணை, அதற்கு முந்தைய நாள்தான் கிடைத்தது. மேலும், வழக்குப் பதிவு செய்யும்படி உத்தரவிட மகளிா் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, மனுதாரருக்கு எதிராக ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனா்.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கே.எம்.டி.முகிலன், மகளிா் ஆணையம் உத்தரவு பிறப்பித்து விட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதுகுறித்த விவரங்களைப் பெற்று சரிபாா்க்க வேண்டியுள்ளது. எனவே, அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து நீதிபதி, மகளிா் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்து மனுவுக்கு விளக்கம் அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.

வேண்டும் இந்த விதிமுறைகள்!

வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடா் இன்று தொடக்கம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

SCROLL FOR NEXT