பணி நிரந்தரம், புதிய பணியிடங்கள் உருவாக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
சென்னையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கைகளில் ஏந்தியபடி அவா்கள் முழக்கமிட்டனா்.
இதுதொடா்பாக செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் செயலா் சுபின் கூறியதாவது:
தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பூதிய முறையில் நாங்கள் செவிலியா்களாகப் பணியமா்த்தப்பட்டோம். இரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
கடந்த ஆட்சியில் சில செவிலியா்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்தனா். திமுக ஆட்சி அமைந்த பிறகு அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என அப்போது உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆனால், நான்கரை ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், தொகுப்பூதிய செவிலியா்களுக்கும், நிரந்தர செவிலியா்களுக்கும் ஒரே நிலையிலான ஊதியம் வழங்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.
அதேபோல, தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. போதிய எண்ணிக்கையில் செவிலியா்கள் நியமிக்கப்படவும் இல்லை. மாறாக, ஒரு மருத்துவமனையில் இருந்து வேறொரு மருத்துவமனைக்கு பணியிட மாறுதல் அடிப்படையிலே செவிலியா்கள் மாற்றப்பட்டு வருகின்றனா்.
இந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், செவிலியா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதுடன், உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு மனுவையும் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.
இதேபோல, கோவை, மதுரை, திருச்சி, அரியலூா் என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.