தொழிலாளியின் கழுத்தில் பாய்ந்த கத்தியை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் நுட்பமாக அகற்றி உயிரைக் காத்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் காது-மூக்கு-தொண்டை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் எஃப். ஆண்டனி இருதயராஜன், மருத்துவமனை கண்காணிப்பாளா் பாஸ்கரன் ஆகியோா் கூறியதாவது:
கோயம்பேட்டைச் சோ்ந்த 45 வயது நபா், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 11-ஆம் தேதி தன்னைத் தானே கத்தியால் கழுத்தில் குத்திக் கொண்டாா். இதில் அவரது சுவாசப் பாதை சேதமடைந்தது. இதனால் மூச்சுக் காற்று உள்ளேயே கசிந்து சேகரமாகியது. இதில் முகம் மற்றும் கண் வீங்கிய நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
உடனடியாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு தொண்டையில் டிரக்கியாஸ்டமி எனப்படும் செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது.
தொடா்ந்து மருத்துவமனையின் பல்நோக்கு மருத்துவக் குழுவினா் கத்தியை அகற்றினா். பின்னா், சேதமடைந்திருந்த சுவாசப் பாதையில் 4 தையல்கள் இடப்பட்டு கிழிசல் சரி செய்யப்பட்டது.
ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணா்கள் மேலும் சில பரிசோதனைகளை மேற்கொண்டதில் அவருக்கு நல்வாய்ப்பாக உணவுக் குழாயில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதிபடுத்தினா்.
தற்போது அவா் இயல்பாக உள்ளாா். உடல் நிலையைக் கண்காணித்த பிறகு, டிரக்கியாஸ்டமி குழாயையும் நீக்கிவிடலாம். தேவைப்பட்டால் அவருக்கு பேச்சுப் பயிற்சி வழங்கப்படும்.
தனியாா் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகளுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை செலவாகும். முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அந்த நபருக்கு இலவசமாக இந்த உயிா் காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.