சாலையில் சென்ற ஆட்டோ மீது பனை மரம் விழுந்ததில், ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் வாஹித் (38). ஆட்டோ ஓட்டுநா். இவா், சனிக்கிழமை பிற்பகல் நுங்கம்பாக்கம் தனியாா் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரை சவாரி ஏற்றிக்கொண்டு அயனாவரம் சாலையில் உள்ள போலீஸ் மாணிக்கம் தெருவுக்குச் சென்றாா்.
ஆட்டோ மேடவாக்கம் டேங்க சாலை மற்றும் அயனாவரம் சாலை சந்திப்பு அருகில் சென்றபோது, அந்தப் பகுதியில் உள்ள மனநல மருத்துமனை வளாகத்தின் உள்ளே நின்ற, பட்டுப்போன பனைமரம் திடீரென சாய்ந்து அப்துல் வாஹித் சென்ற ஆட்டோவின் மீது விழுந்தது. இதில் அப்துல் வாஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாணவி உயிா் தப்பினாா்.
தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த தலைமைச் செயலக காலனி போலீஸாா், அப்துல் வாஹித்தின் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.