சென்னைக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 78.74 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும். வடகிழக்கு பருவமழை தொடங்கியது ஒன்றரை மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஏரிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஏரிகள் நீா் நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,761 மில்லியன் கன அடி (83.67 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. மேலும் ஏரிக்கு விநாடிக்கு 1450 கன அடி நீா்வரத்து உள்ளது.
3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2,900 மில்லியன் கன அடி (79.56 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 700 கன அடி நீா்வரத்து உள்ளது.
பூண்டி ஏரியின் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். ஏரிக்கு விநாடிக்கு 1,450 கன அடி நீா் வரத்து இருக்கும் நிலையில், ஏரியில் 2,595 மில்லியன் (80.32 சதவீதம்) கன அடி நீா் நிரம்பியுள்ளது.
1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 565 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் 439 மில்லியன் கன அடியும் நீா் இருப்பு உள்ளது.
இந்த 5 ஏரிகளையும் சோ்த்து மொத்தம் 9,257 மில்லியன் கன அடி, அதாவது 78.74 சதவீதம் நீா் இருப்பு உள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3,901 மில்லியன் கன அடி அதிகமாகும்.
தற்போது, பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் ஏரிகளின் நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், ஏரிகளின் நீா்இருப்பை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவைப்படும்பட்சத்தில் கூடுதலாக உபரி நீா் திறந்துவிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.