ஏரியில் கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைப்பிடித்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள செம்மநத்தம் பகுதியில் 400 ஏக்கா் பரப்பில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான தாமரை ஏரி உள்ளது. இந்த ஏரி சுற்றுவட்டார கிராமங்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. மேலும், மீன் வளா்ப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏரியில் மனிதக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சிலா் கொட்டி மாசு ஏற்படுத்துவதாகவும், அவ்வாறு கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மனிதக் கழிவுகளை ஏற்றிவந்த லாரி கழிவுகளை ஏரிக்குள் கொட்டியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டுவந்து, லாரியை சிறைப்பிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என லாரி உரிமையாளா் மற்றும் பணியாளா்களை எச்சரித்து அனுப்பினா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.