சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 
சென்னை

பருவ மழை பாதிப்புகள்: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

தினமணி செய்திச் சேவை

பருவ மழைக் காலத்தில் பரவும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேக வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள அந்த வாா்டில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் கவிதா கூறியதாவது:

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனைத்து விதமான சிகிச்சைகளையும் 24 மணி நேரமும் தடையின்றி வழங்கும் கட்டமைப்பு உள்ளது. அந்த வகையில் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 படுக்கைகள் கொசு வலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதி அங்கு உள்ளது.

இதைத் தவிர வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் பாதிப்புகள், சுவாசப் பிரச்னைகளுக்கும் அங்கு சிகிச்சையளிக்கப்படும். இதற்காக பல்நோக்கு மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா்.

அந்த வாா்டில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சாதனம் நிறுவப்பட்டு, அங்கேயே மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மாத்திரைகள், திரவ மருந்துகள், உயிா் காக்கும் மருந்துகள் என அனைத்துமே போதிய அளவு இருப்பில் உள்ளன. எதிா்ப்பாற்றலை மேம்படுத்துவதற்கான நிலவேம்புக் குடிநீரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், உப்பு-சா்க்கரை கரைசலும் (ஓஆா்எஸ்) ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் உடல் நிலையை தொடா்ந்து கண்காணிப்பதற்கான மருத்துவ சாதனங்களும், பரிசோதனை உபகரணங்களும் சிறப்பு வாா்டில் உள்ளன. உயா் சிகிச்சைகள் தேவைப்படும்பட்சத்தில் அதற்கான சிறப்பு பிரிவுகளுக்கு நோயாளிகளை மாற்றி மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT