நாட்டை வளப்படுத்தும் வழி
வரி விதிப்பு நெறிமுறை தொடர்பாக புறநானூற்றில் சிறந்ததொரு பாடல் உள்ளது.
வரி விதிப்பு நெறிமுறை தொடர்பாக புறநானூற்றில் சிறந்ததொரு பாடல் உள்ளது. பாண்டியன் அறிவுடை நம்பிக்கு, பிசிராந்தையார் அறிவுறுத்துவதுதான் பாடல். வரலாற்றில் ஒவ்வோர் அரசும் நெறியற்ற, அறமற்ற வரிகளால்தான் தனது தன்னிலை இழந்து காணாமல் போயின.
ஓர் அரசின் உருவாக்கம், இயக்கம் வரியில் தோன்றி, வரியால் வளர்ந்தது. மக்களுக்கு சலுகைகளை, நலத் திட்டங்களை செய்ய வேண்டுமென்றால் அரசுக்கு வரிகள் முக்கியம்.
இதுகுறித்து புறநானூறு 184- ஆவது பாடலில் கூறப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
வயலில் முற்றிய நெல்லை அறுவடை செய்து, அதை கவளமாகப் பிடித்து யானைக்கு அளித்து வந்தால், அது நெடு நாள்களுக்கு உணவாக வரும். அது சிறிய அளவு நிலத்தில் விளைந்திருந்தாலும்கூட அந்த நெல்மணிகள் நெடு நாள்களுக்கு வரும். அதுவே ஏக்கர் கணக்கில் நெல்மணிகள் முற்றிய வயலில் அறுவடை செய்யாமல் யானையை இறக்கிவிட்டால் என்னவாகும்? அது உண்பதைக் காட்டிலும் மிதித்து நாசமாவதே அதிகமாகுமல்லவா?
மதம் கொண்ட யானையைப் போலவே, அரசை பிசிராந்தையார் உருவகிக்கிறார். இரக்கமற்ற, பரிவற்ற, அறமற்ற வரி வசூலையே யானையாக சுட்டிக்காட்டுகிறார். அரசனை சிறந்த அரசன் என்று சொல்லாமல், அறிவுடைய அரசன் என்று குறிப்பிடுகிறார்.
அறிவுமிக்க அரசன், நெறிமுறை அறிந்து வரி வசூலித்தால், அதிக செல்வத்தைச் சேர்த்து நாட்டை வளப்படுத்த முடியும். பலதலைமுறைகள் அந்த செயலால் சிறப்புடன் வாழமுடியும்.
முறைதவறி, பரிவு இல்லாமல் மக்களைப் பலவழிகளில் துன்பப்படுத்தி, வரி வசூலித்தால், அந்த அரசன் நாட்டை இழந்து, தானும் கெட்டழிந்து போவான்.
காய் நெல் அறுத்துக்
கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும்,
பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும்,
தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால்
பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி
அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான்,
உலகமும் கெடுமே.
(புறம்.184)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.