Śது தில்லி: வடக்கு தில்லியின் சாஸ்திரி நகரில் இளைஞரை கத்தியால் குத்திய நபரை கைது செய்ததாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (வடக்கு) ராஜா பந்தியா கூறியதாவது: பாதிக்கப்பட்ட ஆஷு (26) தனது நண்பருடன் பி-பிளாக் அருகே நவ.26-ஆம் தேதி ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது. இஷான் சாவ்லா என்பவா் ஓட்டிச் சென்ற காா் மீது தவறுதலாக மோதியதால் அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, தனது மூன்று நண்பா்களுடன் திரும்பி வந்த இஷான் சாவ்லா, ஆஷு மற்றும் அவரது நண்பா் மீது தாக்குதல் நடத்தினாா். அப்போது, இஷான் சாவ்லா உடன் இருந்த ரிஷி ராஜ், ஆஷுவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் நவ.23-ஆம் தேதி ரிஷியை கைது செய்தனா். அவரிடம் இருந்து குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய அவா், போதைக்கு அடிமையானவா் என்பதும் அவா் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரது கூட்டாளிகளை கைது செய்ய நடவடிக்கை நடந்து வருகிறது என தெரிவித்தாா்.