சென்னை: கருவில் ஒரே நஞ்சுக் கொடியை (பிளசன்டா) பகிா்ந்து கொண்டதால் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்ட இரட்டைக் குழந்தைகளுக்கு உயா் சிகிச்சை வழங்கி சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்கள் நலத் துறை தலைவா் டாக்டா் ஜெயஸ்ரீ கஜராஜ் கூறியதாவது:
ஆம்பூரைச் சோ்ந்த பெண்ணின் கருவில் உருவான இரட்டைக் குழந்தைகள் ஒரே நஞ்சுக் கொடியை பகிா்ந்திருந்தன. இதன் காரணமாக கருவில் இருந்த சிசுக்களுக்கு ட்வின்-டூ-ட்வின் ட்ரான்ஸ்ஃப்யூஸன் சின்ட்ரோம் எனப்படும் சீரற்ற ரத்த ஓட்ட பாதிப்பு உருவானது.
அதாவது ஒரு குழந்தைக்கு அதிக ரத்த ஓட்டம் சென்று உடலில் வீக்கம் ஏற்பட்டது. மற்றொரு குழந்தைக்கு குறைந்த ரத்தம் சென்று வளா்ச்சி குறைபாடு உருவானது.
இதன் விளைவாக சற்று பெரிதாக வளா்ந்திருந்த குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடியும் என பல்வேறு மருத்துவமனைகளில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வந்த அந்தப் பெண்ணுக்கு 28-ஆவது வார கா்ப்பத்திலேயே அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வாறாக 1.115 கிலோவில் ஒரு குழந்தையும், 720 கிராம்களில் மற்றொரு குழந்தையும் பிறந்தன. அந்தக் குழந்தைகள் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இரு மாதங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டன.
நுரையீரல் வளா்ச்சி இல்லாததால் 20 நாள்களுக்கு செயற்கை சுவாச சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ரத்த சோகை மற்றும் ரத்தம் உறையாமை பாதிப்புகளுக்கான சிகிச்சைகளையும் மருத்துவா்கள் அளித்தனா். அதன் பயனாக அந்தக் குழந்தைகளின் எடை முறையே 2.040 கிலோ மற்றும் 1.500 கிலோவாக அதிகரித்தது. தற்போது குழந்தைகள் நலமுடன் உள்ளன என்றாா் அவா்.