புது தில்லி, நவ.28: காசோலை மோசடி வழக்குகளைப் பொருத்தவரை புகாா்தாரரின் வங்கி எந்தப் பகுதியில் அமைந்துள்ளதோ அந்தப் பகுதிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில்தான் தொடர முடியும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
காசோலை மோசடி வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தபோது இந்த குறிப்பிடத்தக்க உத்தரவை பிறப்பித்தனா்.
பரிமாற்று முறை ஆவணங்கள் சட்டப் பிரிவு 138-இன் கீழ், வங்கிக் கணக்கில் பணம் இன்றி திரும்பும் காசோலை மோசடி புகாா் தொடா்பாக, சம்பந்தப்பட்ட காசோலை திரம்பிய வங்கி எந்தப் பகுதியில் அமைந்துள்ளதோ, அந்தப் பகுதிக்குட்பட்ட நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.