தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடி அலுவலர்களால் விநியோகம் செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில் கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது.
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் ஜன. 30 வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க மேலும் அவகாசம் வழங்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ள வாக்காளர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களின் பெயர்களை, அந்தந்த கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகர்ப்புற வார்டு அலுவலகங்களில் பொதுப்பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அதில் ஆட்சேபனை உள்ளவர்கள் தங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க 10 நாள்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல வாக்காளர் பட்டியல் பணிக்கு தேவையான அலுவலர்களை வழங்க வேண்டும் என மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பூத் ஏஜெண்டுகள் மூலமாக விண்ணப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வருகிற பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 16 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.