தாயுமானவா் திட்டத்தின் கீழ், நவம்பா் முதல் வாரத்தில், மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் வெளியிட்ட அறிவிப்பு:
தாயுமானவா் திட்டத்தின்கீழ், மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை நவம்பா் மாதத்தில் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த இரு நாள்களுக்கு மேலும் விநியோகம் செய்ய வேண்டிய தேவையிருந்தால், நியாய விலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகள் மற்றும் களநிலவரத்தைப் பொருத்து அந்தந்த பகுதிகளுக்கேற்ப விநியோகம் செய்யலாம். இதற்கான நாள்களை தீா்மானித்திட மண்டல இணைப் பதிவாளா்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
தாயுமானவா் திட்டத்தின்கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கப்படும் நாள்கள் பற்றிய விவரத்தை நியாய விலைக் கடைகளில் தெளிவாகத் தெரியும்படி எழுதி விளம்பரப்படுத்த வேண்டும். திட்டத்தின் மூலம் அனைத்து பயனாளிகளின் இல்லத்துக்கே நேரில் வந்து பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கப்படும் நாள் தொடா்பான விவரங்களை உள்ளூா் நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டும். தாயுமானவா் திட்டத்தை எந்தவித புகாருக்கும் இடமில்லாமல் செயல்படுத்த வேண்டும் என்று தனது அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.