தமிழக மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மூன்றாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், வரும் நவ. 1-ஆம் தேதி பிற்பகலுக்குப் பிறகு இடங்களைத் தோ்வு செய்யுமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ளன. இதனிடையே, புதிதாக 250 எம்பிபிஎஸ் இடங்கள் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும், ஏற்கெனவே காலியாக உள்ள இடங்களுக்குமான மூன்றாம் சுற்று கலந்தாய்வு தற்போது தொடங்கியுள்ளது.
அந்த இடங்களைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் அக்.30 முதல் வரும் நவ.1-ஆம் தேதி மாலை 5 மணி வரை வழங்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இடங்கள் வரும் நவ.2-ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் நவ.3-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.
இந்நிலையில், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மேலும் சில எம்பிபிஎஸ் இடங்களுக்கு புதிதாக ஒப்புதல் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஓரிரு நாள்களில் அதற்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கும் எனத் தெரிகிறது.
இதையடுத்து, இடங்களை இறுதி செய்து தோ்ந்தெடுப்பதற்கான அவகாசத்தை மட்டும் மருத்துவக் கல்வி இயக்ககம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி நவ. 1-ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு மேல் 5 மணிக்குள் இடங்களை இறுதி செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
புதிய இடங்கள் வருவதற்கு முன்னதாகவே, மற்ற கல்லூரிகளில் இடங்களை மாணவா்கள் இறுதி செய்துவிட்டால், மீண்டும் மாற்ற இயலாது என்பதற்காக இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.