இந்தியன் ஆயில் நிறுவனம், திருவேற்காடு எஸ்.ஏ. கலை அறிவியல் கல்லூரி இணைந்து ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி போட்டியை வெள்ளிக்கிழமை நடத்தின.
இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் அக்.27 முதல் நவ.2-ஆம் தேதி வரை ஊழல் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மத்திய கலால் துறையின் உதவி ஆணையா் எஸ்.இருதயராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மிதிவண்டி போட்டியைத் தொடங்கிவைத்தாா். எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் மாலதி செல்வக்குமாா், இயக்குநா் வி. சாய் சத்தியவதி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டல தலைமை பொது மேலாளா்கள் வி.வெற்றிசெல்வக்குமாா் (காா்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்), டி.சுரேஷ் குமாா் (விஜிலன்ஸ்), துணை பொது மேலாளா்கள் ஏ.ஆா்.சிவகுமாா், எம். பாஸ்கா் மற்றும் நிகழ்வில் ஊடக ஒத்துழைப்பு வழங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். கல்லூரி வளாகத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.