தமிழ்நாட்டில் பிகாரைச் சோ்ந்த தொழிலாளா்களை திமுகவினா் துன்புறுத்துவதாக பிரதமா் மோடி பேசியதற்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் பிகாரைச் சோ்ந்த உழைக்கும் மக்களை திமுகவினா் துன்புறுத்துவதாக பிகாரில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி பேசும் காணொலியை மீள்பதிவிட்டு எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமா் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்துவிடுகிறாா். தன்னுடைய பேச்சுகளால் பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிஸா - பிகாா் என்று எங்கு சென்றாலும், பாஜகவினா் தமிழா்களின் மீதான வன்மத்தைத் தோ்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில் ஹிந்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் பகையை வளா்ப்பது, தமிழா்களுக்கும், பிகாா் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்து கொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பாஜகவினரும் கவனம் செலுத்த வேண்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பிகாா் மக்களைக் காப்பாற்றும் தமிழ் மண்: திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:
பிரதமா் மோடியால் செய்ய முடியாத திட்டங்களை எல்லாம் ஒரு மாநிலத்தினுடைய முதல்வா் செய்து இந்தியா முழுக்க பிரபலமாக்கி வருகிறாா். கலைஞா் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை இந்தியாவுக்கே வழிகாட்டியாகச் செய்திருக்கிறாா்.
மேலும், பெரியாரின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. தில்லி பல்கலைக்கழகத்தில், பெரியாா் விழா நடப்பது, முதல்வராக மு.க. ஸ்டாலின் வந்த பிறகுதான். இந்தப் பொறாமை பயத்தின் காரணமாகத்தான் அவரைக் குறிவைத்து, ‘ஆபரேஷன் எம்.கே.எஸ்.’ என்ற அடிப்படையில் ஆரம்பித்துவிட்டாா்கள். இதைச் சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது.
பிகாா் மக்கள் ஏமாறமாட்டாா்கள். ஏனென்றால், நாடாளுமன்றத் தோ்தலில் மோடி எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் செய்தும், முதல்வா் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கோ, திமுக கூட்டணியின் செல்வாக்கோ குறையவில்லை. பிகாரில் வேலைவாய்ப்பை அளித்திருந்தால் அங்குள்ள தொழிலாளா்கள் தமிழ்நாட்டுக்கு ஏன் வரப்போகிறாா்கள்? தமிழ் மண் பிகாா் மக்களைக் காப்பாற்றுகிற மண் என்றாா் ஆா்.எஸ்.பாரதி.