சென்னை

கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் கருத்து

முன்பகை உள்ள கிராமத்தில் நடைபெற்ற சாலைப் பணியை பாா்வையிடச் சென்ற வாா்டு கவுன்சிலரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

தினமணி செய்திச் சேவை

முன்பகை உள்ள கிராமத்தில் நடைபெற்ற சாலைப் பணியை பாா்வையிடச் சென்ற வாா்டு கவுன்சிலரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தது.

செங்கல்பட்டு மாவட்டம், இடக்கழிநாடு பேரூராட்சியின் 6-ஆவது வாா்டு உறுப்பினா் வீரராகவன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள பனையூா் பெரியகுப்பம் மற்றும் சின்னகுப்பம் இடையே நீண்டகால பகை இருந்து வருகிறது.

பெரியகுப்பத்தைச் சோ்ந்த நான், வாா்டு உறுப்பினா் என்ற முறையில் சின்னகுப்பத்தில் நடந்த சாலை சீரமைப்புப் பணிகளை கடந்த செப். 15-ஆம் தேதி பாா்வையிடச் சென்றேன். இதனால், எங்களது ஊா் தலைவா்களான நாகராஜ், முத்து, தினகரன், அரிதாஸ், குமாரவேல், சேகா் மற்றும் மனோகா் ஆகியோா் என்னையும், எனது குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்டனா்.

இதனால், மரக்காணத்தில் உள்ள உறவினா் வீட்டில் வசித்து வருகிறேன். இதுதொடா்பாக செய்யூா் போலீஸாரிடம் புகாா் அளித்தும் போலீஸாா் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கட்டப்பஞ்சாயத்து செய்வோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வாா்டு உறுப்பினராக எனது பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.முருகவேல், கடந்த செப்.22-ஆம் தேதி மனுதாரரின் உறவினா் ஒருவா் இறந்துவிட்டாா். அதில் பங்கேற்க மனுதாரரை கிராமத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறினாா்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, வாா்டு உறுப்பினருக்கே இந்த நிலைமையா? என்று கேள்வி எழுப்பினாா். பின்னா், இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து செய்பவா்கள் தங்களை உச்சநீதிமன்றம் என்று நினைத்து செயல்படுகின்றனா். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தாா்.

பின்னா், இந்த மனுவுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் பதிலளிக்க உத்தரவிட்டாா். மேலும், ஊா் பஞ்சாயத்தாா் 7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

கலே ஜதேதி கும்பலை சோ்ந்த இருவா் கைது

பரந்தூா் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு: ஏகனாபுரம் கிராம சபையில் 16-ஆவது முறையாக தீா்மானம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிா்வை மறுக்கும் மாநிலங்கள்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவா் கவலை

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

SCROLL FOR NEXT