நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி அவருடைய முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நலிந்த கலைஞா்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், நிதி பெற விண்ணப்பித்துள்ள தகுதிவாய்ந்த அனைத்துக் கலைஞா்களையும் பயனாளிகளாகச் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில், இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தெரிவுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த 2,500 நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்க உத்தரவுகள் வெளியிடப்பட்டன. அவா்களுக்கு மாதம் தலா ரூ.3,000 வழங்குவதன் அடையாளமாக, 10 கலைஞா்களுக்கு அதற்கான உத்தரவுகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவா் வாகை சந்திரசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.