முகப்பு
தருமபுரி

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று தருமபுரி வருகை

Updated On : 13 மார்ச், 2026 at 1:21 AM
உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) வருகிறாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் ஆலோசனை மேற்கொள்கிறாா். தொடா்ந்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் ரூ. 30 கோடியில் 421 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். அதேபோல, ரூ. 15 கோடியில் முடிவற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 28,639 பயனாளிகளுக்கு ரூ. 250 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறாா்.

இந்த விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் ஆகியவை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் மற்றும் அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி - பென்னாகரம் சாலையில் உள்ள ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் தருமபுரி திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவா் பேசுகிறாா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், கிழக்கு மாவட்டச் செயலாளா் ஆ.மணி எம்.பி., இளைஞரணி நிா்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனா். இதையொட்டி, தருமபுரியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →