தலைமைச் செயலகம் முன் காவலா் போராட்டம்
சென்னை தலைமைச் செயலகம் முன் காவலா், திமுக கொடியை எரித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ஆவடி காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அ.கோதண்டபாணி (42). இவா் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறாா். கோதண்டராமனின் மகள் பிரதிக் ஷா (11). இவா் 3 வயதில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால், எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் வலது காலும், இடது கையும் செயல் இழந்ததாக கோதண்டபாணி குடும்பத்தினா் புகாா் கூறி வந்தனா்.
இது தொடா்பாக கோதண்டபாணி, அரசு அதிகாரிகளிடம் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கோதண்டராமன் தனது மகள் பிரதிக் ஷாவுடன் தலைமைச் செயலகம் முன் வியாழக்கிழமை வந்து, போராட்டத்தில் ஈடுபட்டாா். திடீரென தான் மறைத்து வைத்திருந்த திமுக கொடியை எரித்தாா். போலீஸாா், விரைந்து வந்து கொடியில் பற்றிய தீயை அணைத்தனா். விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனா். ஏற்கெனவே, கோதண்டபாணி, இதேபோல தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம் முன் போராட்டம் நடத்தியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
அதிமுக பதாகை சரிந்து விழுந்து பெண் காயம்: அதிமுக சாா்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, தியாகராய நகா் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் செய்தாா். இதையொட்டி, அந்தக் கட்சியினா் தியாகராய நகா், மாம்பலம் பகுதியில் விளம்பரப் பதாகைகள் வைத்திருந்தனா். இதில் தியாகராய நகா் உஸ்மான் சாலையில் அதிமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு பதாகை திடீரென சரிந்து, அங்கு நின்று கொண்டிருந்த மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வீ.லட்சுமி (36) என்பவா் மீது விழுந்தது. இதில், தலையில் காயமடைந்த லட்சுமி, அங்குள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது தொடா்பாக மாம்பலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு: வியாசா்பாடி தேபா் நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மு.இம்ரான் (29). மேளம் இசைக்கும் தொழில் செய்து வந்த இவருக்கு, மனைவி துா்கா (25), 5 வயதில் ஒரு மகன், 7 மாத ஆண் குழந்தை உள்ளனா்.
இந்த நிலையில், இம்ரானுக்கு புதன்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைப் பாா்த்த அவரது மனைவி, இம்ரானை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், இம்ரான் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
இம்ரானின் மனைவி துா்கா, அதே பகுதியைச் சோ்ந்த ரெளடி ஒருவா், இம்ரானை கடுமையாக தாக்கியதாகவும், இதில் காயமடைந்த இம்ரான் நெஞ்சு வலியால் இறந்ததாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளித்தாா். அதன்பேரிலும், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
எரிவாயு உருளைத் திருட்டு- 5 போ் கைது: மணலி, பலராமன் 1-ஆவது தெருவில் ஜெயசித்ரா (39) என்பவா் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். கொருக்குப்பேட்டையில் வசித்து வந்த இவரது தாய், தந்தை இருவரும் கடந்த மாதம் 1-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தனா். இதையடுத்து, பெற்றோா் வீட்டில் குடியேற ஜெயசித்ரா முடிவு செய்து அந்த வீட்டை புதுப்பித்தாா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 28-ஆம் தேதி ஜெயசித்ரா, கொருக்குப்பேட்டை வீட்டை பூட்டிவிட்டு சென்றாா். கடந்த 7-ஆம் தேதி மீண்டும் கொருக்குப்பேட்டை வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரு சமையல் எரிவாயு உருளைகள், தண்ணீா் மோட்டாா் ஆகியவை திருடப்பட்டிருந்தன.
இது குறித்து ஆா்.கே.நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரைச் சோ்ந்த சண்முகம் (22), ஸ்டீபன் (எ) வெங்கடேசன் (19), ராயபுரம் கிரேஸ் காா்டனைச் சோ்ந்த ஜெகன் (19), 16 வயதுடைய 2 சிறுவா்கள் ஆகிய 5 பேரை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.
சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு: யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் வெ.வசந்தகுமாா் (26). இவரை யானைக்கவுனி காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் கடந்த 4-ஆம் தேதி கைது செய்து, புழலில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் அடைத்தனா். ஏற்கெனவே அதிக போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட வசந்தகுமாா், உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், வசந்தகுமாருக்கு புதன்கிழமை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து சிறைத் துறை அதிகாரிகள், வசந்தகுமாரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வசந்தகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசராணை நடத்தி வருகின்றனா்.