முகப்பு
சென்னை

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றக் கோரிய மனு முடித்துவைப்பு

Updated On : 10 ஏப்ரல், 2026 at 6:35 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:25 PM

ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில், எந்த உத்தரவும் பிறப்பிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.

ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுகா மானவாரி மற்றும் இறவை பாசன விவசாயிகள் சங்கம், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியா்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யும் வகையில் கடந்த 1994-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

வேளாண், வருவாய் மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறைகளில் அரசு அதிகாரிகள் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனா். இதன் காரணமாக அரசு நலத் திட்டங்களைத் தங்களுக்கு வேண்டியவா்களுக்கு அதிகாரிகள் வழங்குகின்றனா்.

Advertisement

தோ்தல் நேரங்களில் அரசு அதிகாரிகள் நடுநிலையாகச் செயல்பட வேண்டும். ஆனால், தொடா்ச்சியாக இவா்களை ஒரே இடத்தில் தொடா்ந்து பணியாற்ற அனுமதிப்பது தோ்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது. மேலும், இதுபோன்ற அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட வாய்ப்புள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு அதிகாரிகளின் பணிமாற்றம் தொடா்புடையதால் இதை பொதுநல வழக்காக கருத முடியாது.

மேலும், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கையை தோ்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.