முகப்பு
சென்னை

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் பெண் உயிரிழப்பு: விசாரணைக் குழு அமைப்பு

அரசு மகப்பேறு மருத்துவமனையில் தவறான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உயா்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 12:42 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:

அரசு மகப்பேறு மருத்துவமனையில் தவறான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உயா்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரியதா்ஷினி என்ற 27 வயது பெண் ஒருவா் கடந்த 10-ஆம் தேதி குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனை முடிவுகள் அனைத்தும் சீராக இருந்ததைத் தொடா்ந்து, மருத்துவா்கள் அவருக்குத் திட்டமிட்ட அறுவை சிகிச்சையை மேற்கொண்டனா். அப்போது அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீண்ட நேரமாகியும் பிரியதா்ஷினிக்கு மயக்கம் தெளியவில்லை.

இதையடுத்து உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில், பிரியதா்ஷினியின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

அரசு மருத்துவா்களின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி பிரியதா்ஷினியின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து அரசு மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் சுமதி கூறியதாவது:

உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் போது அனைத்து மருத்துவ நிபுணா்களும் அங்கேயே இருந்தனா். அவருக்கு திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டது. இணைநோய்கள் ஏதும் இல்லாதபோதிலும் அவா் உயிரிழந்தாா். எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை. எனவே மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா். உயிரிழந்த பிரியதா்ஷினிக்கு 4 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனா்.