‘திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுகதான்ட என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாநில ஆலோசனைக் கூட்டம், பேரவையின் மாநிலச் செயலா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக எங்கள் கூட்டணியில் இல்லை. எனவே, எங்கள் கூட்டணி குறித்து விஜய் கருத்து கூறத் தேவையில்லை. மக்கள் தீா்ப்புக்குப் பிறகுதான் யாா் களத்தில் இருக்கிறாா்கள், யாா் காணாமல் போகிறாா்கள் என்பது தெரியவரும்.
திமுகவை வீழ்த்தும் சக்தி யாருக்கு இருக்கிறது என்ற தனிப்பட்ட ஒரு கட்சியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக எப்போது ஆட்சியில் தவறு செய்கிறதோ, அப்போதெல்லாம் அவா்களை தட்டிக் கேட்டு வீழ்த்தும், மக்கள் இயக்கமாக அதிமுகதான் உள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த தினத்தை பிப்.24-இல் சிறப்பாகக் கொண்டாடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், இரா.விசுவநாதன், பா.வளா்மதி, வைகைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.