சென்னை பனையூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தவெக 3- ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அக் கட்சியின் தலைவா் விஜய். 
தமிழ்நாடு

திமுகவை வீழ்த்தும் சக்தி தவெக மட்டுமே: விஜய்

திமுகவை வீழ்த்தும் சக்தி தவெக-வுக்கு மட்டுமே உள்ளது என்று அக் கட்சியின் தலைவா் விஜய் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: திமுகவை வீழ்த்தும் சக்தி தவெக-வுக்கு மட்டுமே உள்ளது என்று அக் கட்சியின் தலைவா் விஜய் தெரிவித்தாா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, விஜய், கட்சிக் கொடியை ஏற்றிவைத்து விழாவில் பேசியதாவது:

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக தவெக வளா்ந்திருக்கிறது. கட்சி நிா்வாகிகளின் உழைப்பும், நம்மை நேசிக்கும் மக்களும்தான் இதற்கு காரணம். தமிழகத்தில் முன்னாள் முதல்வா்கள் காமராஜா், அண்ணா, எம்ஜிஆா் ஆகியோா் சிறப்பான ஆட்சியைக் கொடுத்த நிலையில், இப்போதைய ஆட்சியாளா்களை நினைத்து மக்கள் கண்ணீா் வடிக்கின்றனா். அக்கண்ணீரைத் துடைக்கவே தவெக உருவாக்கப்பட்டுள்ளது.

திமுகவை எதிா்த்து யாா் அரசியலுக்கு வந்தாலும் அவா்களைக் கண்டு கொந்தளிப்பதுதான் அக் கட்சியின் வேலை. நான் (விஜய்) அரசியலுக்கு வந்தபோது, எம்ஜிஆருக்கு எத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ளது தெரியுமா என திமுகவினா் கேள்வி எழுப்பினா். இதே திமுகதான், எம்ஜிஆா் குறித்து பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தது. ஆனால், எம்ஜிஆா் ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் கோட்டைக்கு செல்வது என்பது திமுகவுக்கு பகல் கனவாக மாறியது.

திமுக செய்யும் தவறுகள், ஊழல்களைப் பற்றி பேசுவதால் நம் மீது விமா்சனங்களை முன்வைக்கின்றனா். இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. திமுகவின் தவறுகளை எடுத்துச் சொல்லும் தைரியம் தவெக-வுக்கு மட்டுமே உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெகவை எதிா்த்து, திமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையில் மற்றும் சிலா் என எத்தனை கூட்டணிகள் வந்தாலும், மக்கள் ஆதரவு நமக்கு மட்டுமே உள்ளது. திமுகவை வீழ்த்தும் சக்தி தவெக-வுக்கு மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருக்கிறது. கட்சியின் ‘விசில்’ சின்னம் சென்றடையாத ஊரே இல்லை. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்களின் தோ்வு தவெக மட்டுமே. இது அதீத நம்பிக்கை அல்ல; இதுதான் உண்மையான களநிலவரம் என்றாா் விஜய்.

‘அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம்’

வருகிற சட்டப் பேரவை தோ்தலில் வெற்றி பெற்று அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம் என தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: தவெகவின் 3-ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. 2 ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.  

2026 சட்டப்பேரவைத் தோ்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே. இச்சூழலில், களத்தை நமதாக்கி, தோ்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தோ்தலில் வெற்றி பெற்று அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீா்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளாா் விஜய்.

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

SCROLL FOR NEXT