சென்னை: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட குப்பைக் கிடங்குகளில் இருந்து 52.65 லட்சம் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு, கொடுங்கையூரில் மட்டும் 6 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் தினமும் சுமாா் 6,300 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி, மாநகராட்சி மண்டலம் 1 முதல் 8 வரை குப்பைகள் கொடுங்கையூா் குப்பை வளாகத்திலும், மண்டலம் 9 முதல் 15 வரை பெருங்குடி குப்பை வளாகத்திலும் பல ஆண்டுகளாகக் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, இரு இடங்களிலும் ஏற்கெனவே குவிந்திருந்த குப்பைகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு வருகின்றன. பெருங்குடியில் 225 ஏக்கரில் குவிந்திருந்த குப்பைகளில் 27.50 மெட்ரிக் டன் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 26.14 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு 94 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன. வரும் மாா்ச்சுக்குள் அனைத்து குப்பைகளும் அகற்றப்பட்டு நிலம் முழுமையாக மீட்கப்படவுள்ளது.
இதேபோல், கொடுங்கையூரில் 252 ஏக்கரில் குப்பைகள் குவிந்த கிடங்கிலிருந்து 73,000 மெட்ரிக் டன் குப்பைகளில் தற்போது 1.07 மெட்ரிக் டன் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு, 6 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதில் 3 ஏக்கரில் மாநகராட்சி மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதாககக் குறிப்பிடப்பட்டுள்ளது.