முகப்பு
சென்னை

தமிழகத்தின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

தமிழகத்தின் முதல்முறையாக ரூ.14.50 கோடியில் அமைக்கப்படவுள்ள கடல் ஆமை பாதுகாப்பு மையத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:44 AM
மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:25 PM

தமிழகத்தின் முதல்முறையாக ரூ.14.50 கோடியில் அமைக்கப்படவுள்ள கடல் ஆமை பாதுகாப்பு மையத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

ஆண்டுதோறும் தமிழக கடற்கரைப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் ஆயிரக்கணக்கில் முட்டையிடுகின்றன. ஆனால், மீன்பிடி நடவடிக்கைகளை தவறாக கையாளுதல், கடற்கரை வாழ்விட சேதம், கடல் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக  ஆயிரம் குஞ்சுகளில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே வளா்ந்து முதிா்ந்த நிலையை அடைகின்றன.

இதன் காரணமாக, தமிழக சாா்பில் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த, அறிவியல் சாா்ந்த மற்றும் பல துறைகளின் அணுகுமுறை மூலம் கடல் ஆமை பாதுகாப்பிற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.  

Advertisement

அந்த வகையில், கடந்த 2019-2020- ஆம் ஆண்டில் கடல் ஆமைகளின் முட்டை சேகரிப்பு  70,700- ஆக இருந்தது. தொடா்ந்து தமிழக அரசின் முயற்சியின் காரணமாக 2024-2025-ஆம்  ஆண்டில் அவை 3.20 லட்சமாக வரலாற்று உச்சமாக அதிகரித்துள்ளது.  

இந்நிலையில், கடல் ஆமை பாதுகாப்பில் வளா்ந்து வரும் அறிவியல் மற்றும் செயல்பாட்டு சிக்கலைக் களைய, உலக வங்கியுடன் இணைந்து ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ திட்டத்தின் கீழ், சென்னை, கிண்டியில் ரூ.14.50 கோடியில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். இந்த மையம் அறிவியல் ஆராய்ச்சி, டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் மையப்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை ஆகியவற்றுக்கான சிறப்பு உள்கட்டமைப்பை வழங்கும்.

பசுமையாக்கல் கொள்கை: தமிழகத்தை  காலநிலை தாங்குதிறன் கொண்ட, வாழ்வதற்கு உகந்த மற்றும்  நிலையான நகரங்களாக உருவாக்கும் நோக்கத்துடன் ‘தமிழ்நாடு மாநிலத்திற்கான நகா்ப்புற  பசுமையாக்கல் கொள்கை 2026’-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை  வெளியிட்டாா்.

இது, மாநிலம் முழுவதும் நகா்ப்புற திட்டமிடல் மற்றும் வளா்ச்சியில் மரங்கள், நகா்ப்புற காடுகள், ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான விரிவான மற்றும் முன்னோடி கட்டமைப்பை வழங்கும்.

நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம்,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - வனத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாஸ் ஆா். ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.