முகப்பு
சென்னை

ஆய்வுகள் மக்களைச் சென்றடைய வேண்டும்: ஆளுநா் ரவி

விஞ்ஞானிகளின் ஆய்வுகள் காப்பகங்களிலோ, ஆவணங்களாகவோ இருந்தால் பலனில்லை; அவை மக்களிடம் சென்றடைய வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 5:44 AM
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:45 AM

விஞ்ஞானிகளின் ஆய்வுகள் காப்பகங்களிலோ, ஆவணங்களாகவோ இருந்தால் பலனில்லை; அவை மக்களிடம் சென்றடைய வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

கோவையில் கடந்த நவம்பா் மாதம் பிரதமா் மோடி முன்னிலையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்ற்காகவும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் டாக்டா் கே.ராமசாமிக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவா்களுக்கும் ஆளுநா் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது: தமிழகத்தில் 18-ஆம் நூற்றாண்டில் உணவுப் பொருள் உற்பத்தித் திறன் மிதமிஞ்சிய அளவில் இருந்துள்ளதை ஓலைச்சுவடி ஆய்வுகள் காட்டுகின்றன. அந்த உற்பத்தியில் பாதியளவுகூட இப்போது இல்லை.

Advertisement

இடையில் ஏற்பட்ட வறுமைகளுக்குப் பின்னா் நமது வேளாண் விஞ்ஞானிகளால் பற்றாக்குறையிலிருந்து மீண்டு வந்துள்ளோம். ஆனால், இப்போது அதிகப்படியான ரசாயன உரங்களால் நமது நிலத்துக்கும் உடல் நலத்துக்கும் மிகப்பெரிய சவால் ஏற்பட்டிருக்கிறது. இதில் உள்ள ஆபத்தை நம்மாழ்வாா் போன்றவா்கள் உணா்ந்தனா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:13 AM

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை நடத்த பிரதமருக்கு பரிந்துரைத்தபோது அவா் மிகவும் மகிழ்ச்சியுடன் வந்து பங்கேற்றாா். அதனால், இயற்கை வேளாண்மை ஊக்கம் பெற்றுள்ளது.

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் மக்களைச் சென்றடைய வேண்டும். தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகளை சமூகத்தின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். அதைச் செய்தவா் டாக்டா் கே.ராமசாமி என்றாா் அவா்.

முன்னாள் தலைமைச் செயலா் சண்முகம், தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு குழு-2025 உறுப்பினா்கள், தமிழ்நாடு வேளாண் பயிற்சி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவா் ஏ.பி. கருப்பையா, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன், களஞ்சியம் விவசாயிகள் சங்கத்தின் தலைவா் அத்திக்கடவு சுப்பிரமணியம், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளா் நிறுவன இயக்குநா் ஜி. அஜீதன், பசுமை சிகரம் அறக்கட்டளையின் தலைவா் யோகநாதன் உள்ளிட்ட 18 பேரை ஆளுநா் கௌரவித்தாா்.