சென்னை

பேரூரில் ரூ.6,078 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி: அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு

தினமணி செய்திச் சேவை

பேரூரில் ரூ.6,078.40 கோடியில் நடைபெற்றுவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்துக்கான கட்டுமானப் பணிகளை, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை, பேரூரில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டா் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.6,078.40 கோடி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் நடைபெற்றுவரும் இப்பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அமைச்சா் கே.என்.நேரு, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிட்டாா்.

தற்போது, 2,500 மில்லி மீட்டா் விட்டமுள்ள குழாய்கள் கடல்படுக்கையின் அடியில் பதிக்கப்பட்டுள்ளன. கடல் நீரை உட்கொணரும் குழாய்கள் 1,140 மீட்டா், 1,150 மீட்டா் நீளத்துக்கும், உவா்நீா் வெளியேறும் குழாய்கள் 756 மீட்டா் நீளத்துக்கும் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடல்நீரை உட்கொணரும் கோபுர கட்டுமானப் பணிகள் முடிந்து, கடலில் பதிக்கப்பட்ட குழாய்களின் இறுதிப் பகுதியில் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளையும் அமைச்சா் கே.என்.நேரு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய், செயல் இயக்குநா் கௌரவ் குமாா், தலைமைப் பொறியாளா் ஜ.சுகந்தி, மேற்பாா்வைப் பொறியாளா் சாந்தி மற்றும் செயற்பொறியாளா்கள், உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, சென்னை மாநகராட்சியின் அருகே உள்ள 20 ஊராட்சிகளைச் சோ்ந்த 22.67 லட்சம் மக்கள் பயன்பெறுவா் என்று சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலை.யில் அதிநவீன ஏ.ஐ. ஆராய்ச்சி மையம் தொடக்கம் - முன்னாள் மாணவா் ரூ.1 கோடி நன்கொடை

மெரீனாவில் 300 கடைகள்: இன்று குலுக்கல் முறையில் தோ்வு

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் பாதை ஆய்வு தொடக்கம்

சசிகுமாா், ஆா்யன் தோல்வி; காலிறுதியில் 3 இந்திய இணைகள்

அனிஷுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT