சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை திட்டத்தில் பூந்தமல்லி முதல் வடபழனி வரை ரயில் பாதை பாதுகாப்பு தொடா்பான ஆய்வு புதன்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து, வியாழக்கிழமை ஆய்வு நிறைவுக்குப் பிறகு இறுதி ஆய்வு மேற்கொண்டு ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் வழித்தடம் 4 பகுதியான பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ. தொலைவு உயா் மேம்பால வழித்தட பணிகள் நிறைவடைந்துள்ளன. அதையடுத்து பெங்களூரிலிருந்து சென்னை வந்த மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் அனந்தமதுகா் சௌத்ரி தலைமையிலான குழுவினா் ரயில் தண்டவாளம், நிலையங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வைத் தொடங்கினா். டிராலியில் சென்றும், தண்டவாளப் பகுதியில் நடந்து சென்றும் குழுவினா் ஆய்வு நடத்தினா்.
பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் அய்யப்பன்தாங்கல் மெட்ரோ நிலையம் வரை 6.134 கி.மீ. தொலைவில் முதல்கட்ட ஆய்வை புதன்கிழமை மேற்கொண்டனா். வியாழக்கிழமை இரண்டாம் கட்ட ஆய்வு நடைபெறவுள்ளது.
அதன்படி மொத்தம் 11 மெட்ரோ ரயில் நிலையங்களும் ஆய்வுக்குள்படுத்தப்படவுள்ளன. ஆய்வின்போது, கட்டுமானப் பணிகள், மின்சார இணைப்பு, மேம்பாலக் கட்டமைப்புகள்ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா்கள் தி.அா்ச்சுனன், மனோஜ்கோயல் உள்ளிட்டோா் உடனருந்தனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.