கூட்டணி ஆட்சி நடைமுறை தமிழக அரசியல் சூழலுக்குப் பொருந்தாது என மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்ட வேண்டும்; தமிழக அரசின் சொம்மொழி இலக்கிய விருது பட்டியலில் உருது மொழியை இணைக்க வேண்டும்; பேரவைத் தோ்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடா்ந்து, எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக மனிதநேய மக்கள் கட்சி அயராது பாடுபடும். தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும்.
அதேபோல் பேரவைத் தோ்தலில் சிறுபான்மையின சமூகத்தை சோ்ந்த இஸ்லாமிய வேட்பாளா்களுக்கு திமுக கூட்டணி அதிகளவில் வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 3 தொகுதிகள் கோரிய நிலையில், 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை 5 தொகுதிகள் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளோம். தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை தொடங்கியவுடன் அது குறித்து முடிவு எடுக்கப்படும். கூட்டணி ஆட்சி நடைமுறை தமிழகத்துக்கு பொருந்தாது என்றாா் அவா்.