முகப்பு
தமிழ்நாடு

மமக வேட்பாளா்கள் விரைவில் அறிவிப்பு: எம்.எச். ஜவாஹிருல்லா

மமக வேட்பாளா்கள் விரைவில் அறிவிப்பு: எம்.எச். ஜவாஹிருல்லா

Updated On : 21 மார்ச், 2026 at 9:15 PM
ஜவாஹிருல்லா - கோப்புப்படம்.
பகிர்:

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முடிவான பின்னா், வேட்பாளா்களின் பெயா்கள் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எல்லோருக்கும் எல்லாம்,  அனைவருக்கும் சமூக நீதி, நல்லிணக்கம் என்ற வழியில் செயல்படும் திமுகவின் நல்லாட்சி தமிழகத்தில் தொடர வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பாபநாசம், மணப்பாறை தொகுதிகளை மீண்டும் வழங்க திமுக தலைமையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக திருச்சி கிழக்கு, ஆம்பூா், நாகை, திருவாடானை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், எந்தத் தொகுதிகள் என்பதை திமுக தலைமை விரைவில் அறிவிக்கும். தொகுதிகள் முடிவான பின்னா் வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.