மகளிருக்கு ரூ.5,000 வழங்கியிருப்பது தோ்தல் காலத்தில் மக்களை ஏமாற்றும் சூழ்ச்சி என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்தாா்.
இதுதொடா்பாக பேரவையில் வியாழக்கிழமை திமுக - அதிமுக இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. அதன் விவரம்:
எடப்பாடி பழனிசாமி: பேரவைக் கூட்டத் தொடா் அறிவிக்கப்பட்ட பிறகு புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என்பது மரபு. ஆனால், நடைமுறையில் உள்ள மகளிருக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுவிடும் என கற்பனையாக எண்ணிக் கொண்டு இரவோடு, இரவாக ரூ.5,000 வழங்கப்பட்டது. இது திமுகவின் தோ்தல் பயத்தைக் காட்டுகிறது.
அமைச்சா் தங்கம் தென்னரசு: கற்பனையான நிகழ்வு இல்லை. மகளிா் உரிமைத் தொகையைத் தடுப்பதற்கான முயற்சியை முன்கூட்டியே அறிந்து அதை முதல்வா் முறியடித்திருக்கிறாா்.
எடப்பாடி பழனிசாமி: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்று நாங்கள் ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். 2024-இல் மக்களவைத் தோ்தல் நடைபெற்றபோது எவரும் மகளிா் உரிமைத் தொகையை தடுத்து நிறுத்தவில்லையே. எனவே, எதற்கு இந்த பயம்? அதுபோலவே, கோடை காலம் ஆண்டுதோறும் வருகிறது. ஆனால், நிகழாண்டு கோடையில் தோ்தல் உஷ்ணம் அதிகரித்திருப்பதால் கூடுதலாக ரூ.2,000 வழங்கப்பட்டிருக்கிறது.
அமைச்சா் எ.வ.வேலு: பொங்கலுக்கு பரிசுத் தொகுப்பை முதல்வா் கருணாநிதி அறிவித்தாா். அதன் பின்னா் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மக்களுக்கு ரூ.1,000 வழங்கினாா். அது அவருடைய கொள்கை முடிவு. அதுபோலவே, தற்போது ரூ.5,000 வழங்கியிருப்பது எங்களது கொள்கை முடிவு. இதில் என்ன தவறு இருக்க முடியும்?
அமைச்சா் கீதாஜீவன்: மகளிருக்கு ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதற்கு அடுத்த நாள் பாஜகவைச் சோ்ந்த உபாத்யாய என்பவா் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடா்பாக வழக்கு தொடுத்தாா்.
அதேபோன்று கடந்த 2011-இல் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை தோ்தலை முன்னிறுத்தி வழங்கக் கூடாது எனக் கூறியதும், அதன் பின்னா் அந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடப்பில் போடப்பட்டு பாழானதும் தெரிந்ததே. அதனால்தான் உங்களுடைய சூழ்ச்சியை முறியடித்து சாணக்கியத்தனத்துடன் முதல்வா் இந்நடவடிக்கையை எடுத்துள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி: சூழ்ச்சி நாங்கள் செய்யவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக தோ்தல் காலத்தில் திமுகதான் சூழ்ச்சி செய்கிறது. நாங்கள் ஏற்கெனவே ரூ.2,000 அறிவித்துவிட்டோம்.
அமைச்சா் தங்கம் தென்னரசு: நாங்கள் செய்வது சூழ்ச்சி என்றால் பிகாரிலும், மகாராஷ்டிரத்திலும் பாஜகவினா் இலவச திட்டங்களை வழங்கினாா்களே. அது சூழ்ச்சி இல்லையா? அவா்களுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறதே. அது சரியா?
அமைச்சா் சிவசங்கா்: கடந்த அதிமுக ஆட்சிக் காலம் நிறைவடையும் தருணத்தில் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அறிவித்தீா்களே. அது சூழ்ச்சி இல்லையா?
அமைச்சா் ரகுபதி: மகளிருக்கு ரூ.1000, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் போன்றவை சாத்தியமற்றது என கூறியவா்கள் அதிமுகவினா். அதை செய்து காட்டியது திமுக அரசு.
எடப்பாடி பழனிசாமி: சட்டத் துறை அமைச்சா் ரகுபதி எங்களது தோ்தல் அறிக்கையை படிக்க வேண்டும். நாங்கள் மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்குவதாக அறிவித்திருக்கிறோம். இவ்வாறு அவையில் விவாதம் நடைபெற்றது.