முகப்பு
தமிழ்நாடு

பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்

பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்கள் மீதான வழக்குகள் காணாமல்போய் விடுவதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்

Updated On : 4 ஏப்ரல், 2026 at 11:46 AM
கனிமொழி | எடப்பாடி பழனிசாமி - சித்திரிப்பு
பகிர்:

பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்கள் மீதான வழக்குகள் காணாமல்போய் விடுவதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கனிமொழி எம்.பி. பேசுகையில், "பாஜக எனும் ஒரு பெரிய வாஷிங்மெஷின் இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஃபிரிட்ஜ் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். ஆனால், வாஷிங்மெஷின் கொடுப்பதாக அவர் சொல்லியிருக்கலாம். அந்தக் கூட்டணிக்கு அதுதான் சரியாக இருக்கும்.

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தால், உங்கள் மீது வருமான வரிச் சோதனை, சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு என எல்லாமும் வரும். எதிர்க்கட்சிகளில் இருந்தால், வழக்கு போடுவார்கள்; மிரட்டுவார்கள்.

Advertisement

ஆனால், அதே ஆள் பாஜகவில் சேர்ந்தாலோ கூட்டணி வைத்துக்கொண்டாலோ, அடுத்த நாளே சுத்தமாகி விடுவர்.

அந்த வாஷிங்மெஷினில் தூக்கிப்போட்டு ஒரு சுற்று சுற்றியவுடன், எந்த வழக்கும் இருக்காது; எல்லாம் காணாமல்போய் விடும். எடப்பாடி பழனிசாமி, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த வாஷிங்மெஷினுக்குள் சென்றுவிட்டார்.

இன்று அவர்கள் உருவாக்கியுள்ள கூட்டணி - சந்தர்ப்பவாத கூட்டணி. தேர்தலுக்குத் தேர்தல் மாறக்கூடிய கூட்டணி, தமிழ்நாட்டைப் பற்றி அக்கறையில்லாத கூட்டணி, தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து துரோகமிழைக்கும் கூட்டணி.

தமிழ்நாட்டுக்கான நிதியைக் கொடுப்பதில்லை. நம் பிள்ளைகள் படிப்பதற்கான பணத்தைக் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டுக்கென எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவதில்லை.

மெட்ரோ ரயில் கேட்டால் - அங்கிருக்கும் மக்கள்தொகை போதாததால், கொடுக்க முடியாது என்கிறார்கள். ஆனால், இங்கைவிட குறைவான மக்கள்தொகை இருக்கக்கூடிய இடங்களிலெல்லாம் இதே மெட்ரோ ரயில் திட்டத்தை வட மாநிலங்களில் தருகிறார்கள். எய்ம்ஸ் எப்போது கட்டி முடிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

அந்த கூட்டணி தமிழ்நாட்டுக்கு எதிரான கூட்டணி என்பதால்தான், இது தமிழ்நாட்டுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையிலான போர் என்று முதல்வர் கூறினார்.

ஒருவிதத்தில் பார்த்தால், இது கீழடிக்கும் நாக்பூருக்கும் நடக்கின்ற யுத்தம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லாருக்கும் எல்லாம், எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும், ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் நாம்.

மக்களை தனித்தனியாகப் பிரித்து ஜாதி, மதம் என்று அவர்களை ஒருவரையொருவர் தினமும் சண்டையிட வைத்து, அதில் குளிர்காய வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆர்எஸ்எஸின் கலாசாரத்துக்கும் அரசியலுக்கும் நடக்கக்கூடிய போர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

summary

DMK MP Kanimozhi criticizes that cases against those who form an alliance with the BJP tend to vanish

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments