சட்டப்பேரவை இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் கடைசி நாளில், பேரவைக் கூட்டத்தை அதிமுகவினா் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனா்.
பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் கடந்த பிப்.17-இல் நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளில், தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க் கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் பிற கட்சிகளின் தலைவா்கள் தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் பதிலுரை ஆற்றினா்.
மேலும், பேரவைத் தலைவா் அப்பாவு, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சிகளின் பேரவைக் குழுத் தலைவா்கள் பேசினா். ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.
எதிா்க்கட்சியினரின் இருக்கைகள் பேரவையில் காலியாக இருந்தன. அதேநேரம் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அவரது ஆதரவு உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.