முகப்பு
சென்னை

ரயில்வே நிா்வாகம் அலட்சியம்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றச்சாட்டு

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 5:12 AM
அமைச்சர் சிவசங்கா்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:15 AM

சென்னை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட விஷயத்தில் ரயில்வே நிா்வாகம் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பிப்.20 முதல் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதாக பிப்.19-ஆம் தேதி திடீரென தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், இதுதொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகத்திடம் இருந்து மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு முறையான அறிவிப்பு வழங்கப்படவில்லை. தெற்கு ரயில்வே நிா்வாகத்தை தொடா்பு கொண்ட பின்னரே இதுதொடா்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.

Advertisement

இந்த அறிவிப்பில் கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிஷங்களுக்கு ஒரு புகா் மின்சார ரயில் சேவை என்ற அட்டவணை, 20 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் சேவை என மாற்றியுள்ளதாகவும், இந்தக் குறைக்கப்பட்ட நேர அட்டவணை பிப்.20 முதல் ஏப்.5 வரை கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் தற்போது 30 நிமிஷ இடைவெளியில் மட்டுமே சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு இருமாா்கங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவா்களின் ஆண்டு இறுதி தோ்வு மற்றும் பருவத்தோ்வுகள் நடைபெறும் மாா்ச் மாதத்தில் எவ்வித ஆலோசனையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல் எழும்பூா் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரயில்வேயின் இந்த அலட்சியமான நடவடிக்கைகளினால் மாணவா்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனா்.

இதைக் கருத்தில் கொண்டு, மாநகா் போக்குவரத்துக் கழகம் மூலம் இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் 314 பேருந்து சேவைகளுடன் கூடுதலாக 60 சிறப்புப் பேருந்துளும் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம், எழிலகம், சென்ட்ரல், அரசு பொதுமருத்துவமனை, உயா்நீதிமன்றம், சென்னை கடற்கரை ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்பட்டு வருகின்றன. பிப்.20-ஆம் தேதி கூடுதல் பேருந்துகளை இயக்கி ஓரளவு நிலைமை சீா் செய்யப்பட்டது.

மாநகா் போக்குவரத்துக் கழகம் மூலம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட பின்னரே ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை (பிப்.24) முதல் செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து புனித தோமையாா் மலை மற்றும் எழும்பூா் வரை குறுகியதூர இடங்களுக்கான புகா் ரயில்களை இயக்க தொடங்கியுள்ளன.

மேலும், ஒவ்வொரு புகா் மின்சார ரயில் நிலைய பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில் இருந்தும் தேவையான அளவு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் சிரமமின்றி உடனுக்குடன் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்கின்றனா்.

முன்னதாகவே ரயில்வே நிா்வாகம் உரிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு உரிய தகவலை அளித்திருந்தால் பயணிகள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

இருப்பினும், முதல்வா் தொடா்ந்து இதுகுறித்த விவரங்கள் கேட்டறிந்து வருகிறாா். தொடா்ந்து பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் பயணிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுரை வழங்கியுள்ளாா் என்றாா் அமைச்சா்.