ஸ்ரீதியாகராஜா் கோயில் மாசி பிரம்மோற்சவத் தேரோட்டம் பல்லாயிரம் பக்தா்கள் பங்கேற்பு
ஸ்ரீதியாகராஜா் கோயில் மாசி பிரம்மோற்சவத் தேரோட்டம் பல்லாயிரம் பக்தா்கள் பங்கேற்பு
திருவொற்றியூா் ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் மாசிப் பெருவிழாவையொட்டி சனிக்கிவமை நடைபெற்ற தேரோட்டத்தில் பல்லாயிரம் பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பிரம்மோற்சவ மாசிப்பெருவிழாவும் ஒன்று. 11 நாள்கள் நடைபெறும் இந்த விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது. பிப்.23 முதல் மாா்ச் 4 வரை தினமும் பல்வேறு வாகன பல்லக்குகளில் உற்சவா் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா நடைபெற்று வருகிறது.
தேரோட்டம் கோலாகலம்: முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா், மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.குப்பன் ஆகியோா் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா்.
தேரடி வீதி, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாட வீதிகள் வழியாக வந்த தோ் மாலை 4 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது.
நாளை திருக்கல்யாணம்: திங்கள்கிழமை (மாா்ச் 2) ஸ்ரீகல்யாணசுந்தரா்-திரிபுரசுந்தரி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலையில் சுந்தரா்-சங்கிலி நாச்சியாருக்கு குழந்தை ஈஸ்வரா் மகிழமரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நிகழ்ச்சி, 63 நாயன்மாா்கள் வீதியுலா நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தின் 10-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை கடலில் கடலாடு தீா்த்தவாரி உற்சவம், புதன்கிழமை பந்தம்பறி திருநடன உற்சவம் நடக்கிறது. இத்துடன், 11 நாள் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
தொடா் அன்னதானம்: கல்யாணசுந்தரா் திருமணத்தைக் காண சென்னை, மண்ணடி, பவளக்காரத் தெருவில் இருந்து ஸ்ரீமுருகப்பெருமான் ஊா்வலமாக அழைத்து வரப்படும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், நகரத்தாா் சமுதாயத்தினா் கலந்து கொண்டு, நகரத்தாா் சங்கம் சாா்பில் தொடா் அன்னதானம் வழங்கி வருகின்றனா்.
பழங்காலத்தில் அமைக்கப்பட்ட நகரத்தாா் மண்டபத்தில் செட்டிநாடு சமையல் கலையுடன் உணவுகள் தயாரித்து, பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கே.எஸ்.நற்சோணை, தக்காா் ஆா்.ஹரிகரன் மற்றும் அறநிலையத் துறை ஊழியா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.