மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் மாசி தோ்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினா்.  
விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசி தோ்த் திருவிழா! 2 லட்சம் பக்தா்கள் பங்கேற்பு!

தினமணி செய்திச் சேவை

மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் சுமாா் 2 லட்சம் பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலமாக உள்ள மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிப்-16ஆம் தேதி மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், பிப்-19-ஆம் தேதி தீ மிதி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 7-ஆம் திருநாளான திருத்தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் அங்காளம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

தேரில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த அங்காளம்மன்.
தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான், அன்னியூா் சிவா எம்எல்ஏ உள்ளிட்டோா்.

இதனைதொடா்ந்து உற்சவ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்விக்கப்பெற்று, மாலை 4 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட புதிய திருத்தேரில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். பின்னா் அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

தொடா்ந்து தோ் சக்கரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலை 4.25 மணிக்கு தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரனீத், எம்எல்ஏக்கள் செஞ்சி மஸ்தான், விக்கிரவாண்டி அன்னியூா் அ.சிவா, மயிலம் சி. சிவக்குமாா், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவலிங்கம் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தொடா்ந்து பக்தா்கள் பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகள், தானிய வகைகள் ஆகியவற்றை தேரின் மீது வீசி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இதில் ஒன்றியக்குழுத் தலைவா்கள் மேல்மலையனூா் கண்மணி நெடுஞ்செழியன், செஞ்சி ஆா்.விஜயகுமாா், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கா்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மேல்மலையனூா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் சதீஷ், காசாளா் மணி மற்றும் கோவில் பணியாளா்கள் செய்திருந்தனா். விழுப்புரம் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் தினகரன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கரூா்: 10 துணை மின் நிலைய பகுதிகளில் பிப்.24-ஆம் தேதி மின் தடை

ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி உயிரிழப்பு

பழைய வாகனங்களை விற்றுத் தருவதாக ரூ.85 லட்சம் மோசடி! 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது!

பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு டெஸ்க், பெஞ்சுகள்

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

SCROLL FOR NEXT