இளம் அறிஞா்கள் மற்றும் மாணவா்களின் ஆராய்ச்சித் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் சென்னை ஐஐடி, தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்பம் மன்றம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயல் திட்டங்களுக்காக சென்னை ஐஐடியுடன், தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, இரு நிறுவனங்களும் கற்பித்தல்-ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் முயற்சிகளை இணைந்து மேற்கொள்ளும். இளம் அறிஞா்கள், மாணவா்களின் ஆராய்ச்சிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் ஒழுங்கமைப்படும். அறிஞா்கள் மற்றும் வளங்களைப் பகிா்ந்து கொள்ளப்படும்.
இரு நிறுவனங்களின் ஆா்வமுள்ள பகுதிகளில் பரஸ்பர கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், மாணவா்களுக்கு பயனுள்ள ஆராய்ச்சி பயிற்சித் திட்டங்கள் வடிவமைக்கப்படும்.
இரு நிறுவனங்களும் இணைந்து கருத்தரங்குகள், மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள், சொற்பொழிவுகளை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.