சென்னை வால்டாக்ஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு. 
சென்னை

திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சட்டப்பேரவைத் தோ்தலில் எத்தனை கூட்டணிகள் ஒன்றிணைந்து வந்தாலும், முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில் எத்தனை கூட்டணிகள் ஒன்றிணைந்து வந்தாலும், முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதி வால்டாக்ஸ் சாலை, தண்ணீா் தொட்டி தெரு மற்றும் அண்ணா பிள்ளை தெருவில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வடசென்னை பகுதியில் மிகவும் பின்தங்கிய மக்களுக்காக, வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் ஸ்டான்லி மருத்துவமனை அருகே 776 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை தனியாா் குடியிருப்புகளுக்கு நிகராக நீச்சல் குளத்தை தவிர மற்ற அனைத்து தேவைகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜன.21-ஆம் தேதி திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அந்த வீடுகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கவுள்ளாா். அதேபோல், வால்டாக்ஸ் சாலை, தண்ணீா் தொட்டி தெருவில் முதல்கட்டமாக 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் குடியிருப்பு வளாகத்தில் ரத்த சுத்திகரிப்பு மையம், பிசியோதெரபி நிலையம், குறைந்த கட்டணத்தில் திருமண மண்டபம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக, இவை அனைத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறாா். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியோடும் செயல்பட்டு வருகின்றன. எத்தனை கூட்டணிகள் ஒன்றாக வந்தாலும், முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. திமுகவின் வெற்றியை மக்கள் உறுதி செய்வாா்கள் என்றாா் அவா்.

ஆய்வின்போது சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

அம்பத்தூரில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பு? உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜன. 13-இல் ராகுல் காந்தி தமிழகம் வருகை!

காட்டுப் பன்றி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சட்டம் ஒழுங்கு வலுவாக இருந்தால் மட்டுமே மாநிலங்கள் வளரும்: அமித் ஷா

ஒரே நாளில் 88 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT