மத்திய பட்ஜெட்டில் ஒப்புக்காவது திருக்குறள் இருக்கும், இந்தாண்டு அதுகூட இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (பிப். 4) விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசுகையில், “நாம் ஒரு பக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிட்டு வந்தால், மற்றொரு பக்கம் மத்திய பாஜக அரசும், அதனுடைய கூட்டாளிகளும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுப்பதற்கு அனைத்து செயல்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு சமீபத்திய உதாரணம் தான் மத்திய அரசு வெளியிட்டிருக்கக்கூடிய நிதிநிலை அறிக்கை - இந்த பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு எதுவுமே இல்லை. இதுவரைக்கும் ஒப்புக்கு திருக்குறளாவது சொல்லிக் கொண்டு வந்தார்கள். அதுவும் இந்த ஆண்டு அதுகூட கிடையாது. பெயருக்குக் கூட தமிழ்நாட்டிற்கு எந்த வளர்ச்சித் திட்டமும் கிடையாது. நம்முடைய பல்லாண்டு கோரிக்கைகள் எதுவும் கிடையாது.
பொதுவாக, தேர்தல் நடைபெறுகின்ற மாநிலங்களுக்கு அந்த ஆண்டில் நிதி ஒதுக்குவது பாஜக-வின் தந்திரமாக இருக்கும். பிகார், ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு அப்படிதான் நிதியை ஒதுக்கினார்கள். செய்து கொடுத்தார்களா? என்று கேட்டால், அதுவும் இருக்காது. இப்போது தமிழ்நாட்டிற்கு தேர்தல் வரப்போகிறது. பாஜக அனைத்து மாநிலங்களிலும், வழக்கமாக செய்யக்கூடிய அந்த பாணியைகூட தமிழ்நாட்டிற்கு செய்யவில்லை. அந்த அளவிற்கு, தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு – நன்றாக யோசித்துப் பாருங்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இன்றைக்கு இருக்கிறது. நாட்டிலேயே அதிகமாக நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்! அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமும் தமிழ்நாடுதான்.
இந்தியாவின் வளர்ச்சிக்காக நாம் இந்த அளவிற்கு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட மாநிலத்தில், புதிய நெடுஞ்சாலைகள், ரயில்வே வழித்தடங்கள், மெட்ரோ ரயில்கள் என்று ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது.
ஆனால், மத்திய அரசிற்கு வரி வருவாய், வாரி வழங்குகின்ற நம்முடைய மாநிலத்திற்கு மிக மிக மிக சொற்பமான பங்கைத்தான் திரும்பி வழங்குகிறார்கள்.
11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் வஞ்சிக்கிறார்கள். ஏன் இப்படி? ஒருவேளை தேர்தல் ரிசல்ட் முன்கூட்டியே அவர்களுக்குத் தெரிந்து, எப்படியும் தோற்கத்தான் போகிறோம் – இவர்களுக்கு எதற்கு நிதி ஒதுக்கவேண்டும்? என்று அப்படி நினைத்திருக்கலாம். அதுதான் உண்மை - உண்மை தான், நாம் தான் வெற்றிப் பெறப்போகிறோம் அதில் எந்த மாற்றமும் கிடையாது. அடுத்தும் உங்கள் ஆதரவோடு அமையப்போகிறது திராவிட மாடல் 2.0 அரசுதான். அடுத்து அமையவுள்ள நம்முடைய ஆட்சி இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவோம்!” என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.