சென்னை மாநகராட்சியில் இதுவரை 1,769 பேரிடம் இருந்து 664.68 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருள்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டன.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீடுகளில் இருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள், உடைகள் உள்ளிட்ட திடக் கழிவுகளை சனிக்கிழமைதோறும் பெற்று, அகற்றும் புதிய நடவடிக்கை கடந்த அக். 11-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 14 சனிக்கிழமைகளில் 1,769 பேரிடம் இருந்து 664.68 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும் (ஜன. 10) 102 பேரிடம் இருந்து 42.82 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் சென்று, விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
பொதுமக்களுக்கு அழைப்பு: இந்தச் சேவையைப் பெற விரும்பும் பொதுமக்கள் முன்கூட்டியே சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலியில் பதிவு செய்ய வேண்டும். அல்லது 1913 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மேலும், 94450 61913 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் அனுப்பலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.