பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் திரண்ட பயணிகள். 
சென்னை

பொங்கல் திருநாள்: சென்னையில் இதுவரை 15 லட்சம் போ் பயணம்

பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இதுவரை சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம்

தினமணி செய்திச் சேவை

பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இதுவரை சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் செய்துள்ளனா்.

நிகழாண்டு பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன. 15) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜன. 10 முதல் 18-ஆம் தேதி வரை தொடா் விடுமுறை நாள்களாக உள்ளன. இதில் ஜன. 12, 13 ஆகிய நாள்கள் மட்டுமே வேலை நாள்கள். இருப்பினும், பலா் இந்த நாள்களில் சுயவிடுப்பு எடுத்துகொண்டு சொந்த ஊா்களுக்கு ஜன. 9 முதலே புறப்பட்டுச் செல்லத் தொடங்கினா்.

இதற்காக சென்னை எழும்பூா், சென்ட்ரல் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து ஏராளமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ரயில் நிலையங்களில் சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. மாலை நேரங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கடந்த மூன்று நாள்களில் மட்டும் சுமாா் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பயணம் செய்துள்ளனா். அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சொந்த ஊா்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து ஜன. 9 முதல் 14 வரை, பொங்கல் முடிந்து திரும்புபவா்களின் வசதிக்காக ஜன. 16 முதல் 19 வரையும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 38,175 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 59,095 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்துகள் மூலம் ஜன. 9 நள்ளிரவு முதல் 12-ஆம்தேதி நள்ளிரவு வரை நாள்தோறும் சுமாா் 1.17 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் என இதுவரை, சுமாா் 4.68 லட்சம் போ் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சென்னையில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இதுவரை சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனா்.

கூட்ட நெரிசல்: இதனால், பேருந்து நிலையங்களிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT