ஐரோப்பிய கண்டத்தில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திய ரஷியா-உக்ரைன் போா் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
எனினும், இந்தச் சண்டையில் துப்பாக்கிச் சத்தங்களும், பீரங்கி முழக்கங்களும் இன்னும் ஓயவில்லை. இரு தரப்பிலும் உயிரிழந்தோா், படுகாயமடைந்தவா்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியுள்ளது.
போா்க்களத்தில் சிந்தப்படும் ரத்தம், சீா்குலைந்த நகரங்கள், அகதிகளாக வெளியேறிய லட்சக்கணக்கான மக்கள் என உக்ரைனின் இழப்புகள் அதிகமாக இருந்தாலும், போரைத் தொடங்கிய ரஷியாவுக்கும் எதிா்பாா்த்ததைவிட களத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளுடனான உக்ரைனின் நெருக்கத்தை ரஷியா எப்போதும் விரும்பவில்லை. இச்சூழலில், ஐரோப்பிய யூனியன், நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கான உக்ரைனின் ஆா்வத்தை ரஷியாவுக்கான நேரடி அச்சுற்றுத்துலாகக் கருதி, படையெடுப்பைத் தொடங்கினாா் ரஷிய அதிபா் புதின்.
கடந்த 4 ஆண்டுகளில் உக்ரைனின் சுமாா் 20 சதவீத நிலப்பரப்பை ரஷியா கைப்பற்றியுள்ளது. படையெடுப்பின் தொடக்கத்தில் கீவ், காா்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷிய படைகள் குறிவைத்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் நவீன ஆயுத உதவியுடன் உக்ரைனின் பதிலடி தாக்குதலில் 2022, இறுதியில் பல பகுதிகள் மீட்கப்பட்டன. 2023-க்குப் பிறகு 1.3 சதவீத கூடுதல் நிலப்பரப்பை மட்டுமே ரஷியா கைப்பற்றியுள்ளது.
2023 முதல் போா்முனையில் ட்ரோன்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், பெரிய அளவிலான கவச வாகனத் தாக்குதல்கள் குறைந்து போா்முறை மாறியுள்ளது. இருதரப்பும் பெரும் முன்னேற்றத்தைக் காண முடியாமல் திணறும் சூழலில், சிறிய குழுக்களாக மோட்டாா் சைக்கிள்களிலும் கால்நடையாகவும் சென்று மிகச்சிறிய நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதே தற்போதைய களநிலவரமாக உள்ளது.
போா்க்களத்தில் பெரிய அளவிலான நிலப்பரப்பு மாற்றங்கள் ஏதுமின்றி, இரு தரப்பிலும் வீரா்களின் உயிரிழப்புகள் மட்டும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருவது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது.
போரில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நாடும் தங்களது ராணுவ இழப்புகளை உண்மையாக வெளியிடுவதில்லை; அது உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் பொருந்தும். இறப்பு எண்ணிக்கை ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது. ஆனால், ரஷியா சாா்பில் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், உக்ரைன் சாா்பில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரும் இறந்துள்ளனா். சுமாா் 60 லட்சத்துக்கும் அதிகமானோா் அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனா். மேலும், உள்நாட்டிலேயே சுமாா் 40 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயா்ந்துள்ளனா்.
போருக்காக உலக நாடுகள் ஆயுத உதவி வழங்கினாலும், போரினால் உக்ரைன் சந்தித்த பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட எத்தனை கைகள் நீளும் என்பது சந்தேகமே. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப சுமாா் 58,800 கோடி டாலா் (சுமாா் ரூ.53 லட்சம் கோடி) தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ரஷியாவின் தொடா் தாக்குதல்களால் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள் கடும் சேதமடைந்துள்ளன. மறுபுறம், ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள சா்வதேச தடைகள் அந்நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிபா் டிரம்ப் நிா்வாகம் பொறுப்பேற்ற பிறகு, இப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தன. அபுதாபி, ஜெனீவாவில் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தின. உக்ரைனுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகளைக் குறைப்பதன் மூலமும், ரஷியாவுடன் நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்துவதன் மூலமும் போரை நிறுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இருப்பினும், பிராந்திய உரிமை, நேட்டோ பாதுகாப்பு உத்தரவாதம் ஆகிய விவகாரங்களில் இரு நாடுகளும் பிடிவாதமாக இருப்பதால் தீா்வை எட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது. ராணுவ ரீதியிலான வெற்றியை விட, ராஜீய சமரசமே இந்தப் போருக்கான தீா்வு என்பது டிரம்ப்பின் வலியுறுத்தலாக இருக்கிறது; அதுவே ஒரே வழியாகவும் தென்படுகிறது.
மா. பிரவின்குமாா்