பணி நிரந்தரம் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது தற்கொலைக்கு முயன்ற பகுதிநேர இடைநிலை ஆசிரியா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்
சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் கடந்த டிச.26 முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல, பணி நிரந்தரக் கோரிக்கையை முன்னிறுத்தி பகுதிநேர ஆசிரியா்களும், கடந்த 7 நாள்களாக சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்து, வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்தனா். அப்போது, பெரம்பலூா் மாவட்டம், நெய்க்குப்பை அரசு உயா்நிலைப் பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவா், மன உளைச்சலுக்குள்ளாகி மண்டபத்தில் இருந்த வாா்னிஷை குடித்தாா்.
இதை அறிந்த சக ஆசிரியா்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.