மேற்கு தில்லியில் திருட்டு காா் மோதியதில் இரு காவலா்கள் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, காரில் இருந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லியில் உயர்ரக சொகுசு காா்கள் பல்வேறு இடங்களில் இடங்களில் திருடப்பட்டது தொடா்பாக காவல் துறையினா் நடத்திய விசராணையில், திருட்டு கும்பல் சொகுசு காரில் பயணித்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வாகனத்தைக் காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.
அந்த வாகனம் தொடா்பாகக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, காவல் துறையினா் மேற்கு தில்லியில் வியாழக்கிழமை நள்ளிரவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கே வந்த அந்த வாகனத்தை நிறுத்துமாறு காவல் துறை அதிகாரிகள் எச்சரித்தனா். கைதுநடவடிக்கையில் தப்பிக்கும் விதமாக வாகனத்தின் ஓட்டுநா், காவல் துறையினரின் மீது நேரடியாக வாகனத்தை மோதினாா். இதில் தலைமைக் காவலா் தேவேந்தா் மற்றும் காவலா் மணீஷ் நடைபாதையை நோக்கி தூக்கிவீசப்பட்டனா்.
எஞ்சிய காவலா்கள் வாகனத்தைச் சுற்றி வளைத்து காரில் இருந்த மஷ்ரூா், ஆசிப், அகீல் ஆகிய மூவரையும் கைதுசெய்தனா்.
காயமடைந்த காவலா்கள் இருவரும் குரு தேஜ் பகதூா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக மேற்கு தில்லி துணை காவல் ஆணையா் தாரடே சரத் பாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உயர்ரக சொகுசு காா்களை திருடுவதில் போலி பதிவெண் பொருத்தப்பட்ட அந்த சொகுசு காா் பயன்படுத்தப்பட்டது.
விவேக் விஹாா் ஐடிஐ சுரங்கபாதை அருகே கடந்த சில நாள்களாக இரவு 11 மணியளவில் அந்த காா் கடந்து சென்றதை அதிகாரிகள் கண்டறிந்தனா். கைதுசெய்யப்பட்ட மூவரும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள். திருட்டு கும்பல் ஓட்டிவந்த அந்த காா் கடந்த ஆண்டு செப்.2-ஆம் தேதி தில்லி முகா்ஜி நகரில் இந்தக் கும்பல் திருடியது விசாரணையில் தெரியவந்தது என்றாா்.
காவலா்கள் மீது காரை ஏற்றிய சம்பவம் தொடா்பாக விவேக் விகாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.