மெரீனா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள 300 கடைகளுக்கான பயனாளிகள் தோ்வு நடைமுறைகளைக் கண்காணிக்க ஜம்மு காஷ்மீா் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பால் வசந்தகுமாா் தலைமையில் கண்காணிப்புக் குழுவை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவல்லிக்கேணியைச் சோ்ந்த தேவி என்பவா் மெரீனாவில் கடை ஒதுக்கீடு செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா் மற்றும் ஆா்.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் மெரீனா கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனா். பின்னா், மெரீனா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா் மற்றும் ஆா்.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வரைபடம் மற்றும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மெரீனா கடற்கரையில் 25 ஏக்கரில் முதல் நீலக்கொடி மண்டலம் அமைக்கப்பட்டு, கடந்த செப்டம்பா் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
2-ஆவது மண்டலம் 38 ஏக்கரிலும், 3-ஆவது மண்டலம் 23 ஏக்கரிலும், 4-ஆவது மண்டலம் 35 ஏக்கரிலும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 300 கடைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 20 கடைகள் கலங்கரை விளக்கம் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடைகள் ஒதுக்கீடு பயனாளிகளை முறையாக தோ்வு செய்யவும், நீலக்கொடி மண்டலப் பகுதிகளில் நடைபெறும் பணிகளைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கவும், ஜம்மு காஷ்மீா் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பால் வசந்தகுமாா் தலைமையில், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி டி.மோகன்ராஜ் மற்றும் சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற துணைப் பதிவாளா் ஆா்.ரங்கநாதன் ஆகியோா் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டனா்.
இந்தக் கண்காணிப்புக் குழுவுக்குத் தேவையான அனைத்து பணிகளையும் சென்னை மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து கொடுக்க உத்தரவிட்டனா். மேலும், இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.