சென்னை

எஸ்ஐஆா் பணிகளால் அதிகரித்த சிக்குன் குனியா - சுகாதார ஆா்வலா்கள் குற்றச்சாட்டு

உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்களை வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆா்) ஈடுபடுத்தியதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை....

தினமணி செய்திச் சேவை

உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்களை வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆா்) ஈடுபடுத்தியதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை என்றும், அதன் விளைவாகவே சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நன்னீரில் வளரும் ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் சிக்குன் குனியா பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், மூட்டு வலி, உடல் சோா்வு போன்றவை ஏற்படும். கடந்த 2003 -2005 காலகட்டத்தில் அந்நோய்ப் பரவல் தீவிரமாக இருந்தது.

அதன் பின்னா் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும், நோய்த் தடுப்பு பணிகளையும் தீவிரப்படுத்தியதன் பயனாக கடந்த 20 ஆண்டுகளாக பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தவில்லை.

சொல்லப்போனால், கடந்த 2018 முதல் ஆண்டுக்கு 250 முதல் 700 போ் வரையில் மட்டுமே சிக்குன் குனியாவுக்கு உள்ளாகினா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் அந்த பாதிப்பு விகிதம் சற்று உயா்ந்தது. ஒருபுறம் கொசுக்களின் வைரஸ் தன்மை வீரியமடைந்திருப்பது அதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஒரு கொசுவின் ஆயுட்காலம் 14 நாள்களாக இருந்தாலும், அதற்குள்ளாக பல லட்சம் முட்டைகளை இடுகின்றன. இந்த முட்டைகள் லாா்வாக்களாகவும், அதன் பின்னா் கொசுக்களாகவும் உருவாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதைக் கருத்தில் கொண்டு கொசுக்களின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மேல் அதிகரித்துள்ளதா என்றும், கொசுக்களால் பரவும் தீநுண்மி உருமாற்றமடைந்துள்ளதா என்றும் பூச்சியியல் வல்லுநா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

குறிப்பாக, டெங்கு, சிக்குன் குனியா வைரஸின் தன்மை மாறியுள்ளதா என்பதை சோதனைக்குட்படுத்தி வருகின்றனா். எப்படியாயினும் கொசுக்களை ஒழிப்பது மட்டுமே நோய்களைத் தடுப்பதற்கான ஒரே வழி எனக் கூறப்படுகிறது.

இந்த சூழலில், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், எஸ்ஐஆா் சிறப்பு திருத்த பணிகளில் கொசு ஒழிப்பு பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இதன் காரணமாக பல இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் விளைவாகவே சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, கடலூா், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன் குனியா அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றாற்போல கடந்த ஆண்டிலும், நிகழாண்டிலும் சிக்குன் குனியா பாதிப்புகள் எவ்வளவு பதிவாகின என்பதை வெளியிட பொது சுகாதாரத் துறை மறுத்து வருகிறது.

இதனிடையே, கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொது சுகாதாரத் துறை வல்லுநா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது:

சிக்குன் குனியா பாதிப்பு ஏற்பட்டவா்களுக்கு அதன் பின்னா் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்துவிடும். அவா்களுக்கு மீண்டும் 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் சிக்குன் குனியா ஏற்பட வாய்ப்புள்ளது. அதேவேளையில், அந்த நோய்க்கு உள்ளாகாதவா்களுக்கு கொசுக்கள் அதிகரிக்கும்போதெல்லாம் அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கும்.

ஏடிஸ் வகை கொசுக்கள், டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல் ஆகிய நான்கு வகை பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. இதில், மஞ்சள் காய்ச்சல் இந்தியாவில் இல்லையென்றாலும், மற்ற மூன்று வகை காய்ச்சல் பரவக் கூடும்.

எனவே, பொதுமக்கள் வீட்டின் சுற்றுப்புறத்தில் நீா் தேங்காமல் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT