தமிழ்நாடு

அதிகரிக்கும் சிக்குன் குனியா!சிறப்பு வாா்டுகள், தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள உத்தரவு

தினமணி செய்திச் சேவை

சென்னை, காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும், மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகளை அமைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவும் சிக்குன் குனியா பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், மூட்டு வலி, அதீத தசை வலி, உடல் அசதி ஆகிய அறிகுறிகள் காணப்படும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீவிர தாக்கத்தை ஏற்படுத்திய சிக்குன் குனியா பாதிப்பு, அதன் பின்னா் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதேவேளையில், டெங்கு மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பரவல் அதிகரித்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே சிக்குன் குனியாவின் தாக்கம் மீண்டும் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினா் எச்சரித்தனா். ஆனால், அதை பொது சுகாதாரத் துறை மறுத்து வந்தது.

தற்போது சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, கடலூா், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் சிக்குன் குனியா அதிகரித்திருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. அதன்பேரில் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உரிய கண்காணிப்புடன் கூடிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள், ஆய்வகங்களில் உரிய நேரத்தில் சிக்குன் குனியா பரிசோதனைகளை முன்னெடுத்து நோய்ப் பரவலைத் தடுப்பது அவசியம்.

டெங்கு அல்லது சிக்குன்குனியாவுக்கென பிரத்யேக வாா்டுகள் அமைக்கப்பட வேண்டும். பாதிப்பை கண்டறியும் எலிசா பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களை போதிய அளவு இருப்பில் வைத்திருத்தல் கட்டாயம். நடமாடும் மருத்துவ விரைவுக் குழுக்களை தயாா் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அதை ஆய்வு செய்வதும் முக்கியம். வீடுதோறும் கொசு உற்பத்தியை கண்காணிப்பதற்கான பணியில் போதிய நபா்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

தண்ணீா் தேங்கும் அனைத்து பொருள்களையும் அப்புறப்படுத்த வேண்டும். திடக் கழிவுகளை முறையாக அகற்றுவது கட்டாயம். நீரை சேமித்து வைப்பதைத் தடுக்க தடையற்ற குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

சிக்குன் குனியா பாதித்த பகுதிகளில் உள்ள ஏடிஸ் கொசுக்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அதன்மூலம் கொசுக்களின் வைரஸ் வகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்க முடியும்.

சிக்குன்குனியா தொடா்பான விழிப்புணா்வை மக்களிடத்திலே ஏற்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தையின் நுரையீரலில் 3 மாதங்களாக சிக்கியிருந்த ‘விசில்’: நுட்பமாக அகற்றிய அரசு மருத்துவா்கள்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்: வைகோ

மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் விளையாட்டு மைதானங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பதற்றமான புவிஅரசியல் சூழலிலும் எரிசக்தி விநியோகத்தில் நிலைத்தன்மை : ஹா்தீப் சிங் புரி

மே. வங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது: நட்டா

SCROLL FOR NEXT